புதுடெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் தொடக்க உரை குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்திருந்த கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜகவினர் இக்கருத்துக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.
பாஜக மூத்த தலைவர் ஜே.பி.நட்டா இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “ஒரு நாட்டின் குடியரசுத் தலைவரை, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இது போன்று பேசுவதை பாஜக சார்பில் கடுமையாகக் கண்டிக்கிறோம். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து சோனியா காந்தி பாவம் என்று கூறியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். வேண்டுமென்ற பயன்படுத்தப்பட்ட இதுபோன்ற வார்த்தைகள் காங்கிரஸ் கட்சியின் மேலாதிக்க, ஏழைகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது. குடியரசுத் தலைவர் முர்முவிடமும், இந்திய பழங்குடி சமூக மக்களிடமும், காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.