சென்னை: “நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நியாய விலைக்கடை பணியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேச வேண்டிய அரசு நிர்வாகம், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என சர்வாதிகார போக்கில் எச்சரிக்கை விடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நியாய விலைக்கடை பணியாளர்களின் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நியாய விலைக்கடை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் திமுக அரசின் சர்வாதிகாரப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப ஊதியம், தரமான பொருட்களை சரியான எடையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (ஏப்.22) தொடங்கியிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.