துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் வரும் 2-ம் தேதி துபாயில் மோத உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பிறகு 2 நாட்கள் ஓய்வில் இருந்த இந்திய அணி வீரர்கள் நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது ரோஹித் சர்மாவுக்கு தொடை பகுதியில் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடாத அவர், மனவலிமைக்கான பயிற்சி மற்றும் பிசியோதெரபி எடுத்துக் கொண்டார். அநேகமாக நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா களமிறங்குவது சந்தேகம் என்றே அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.