அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் பெற்று, அதை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்ட நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிதி நிறுவனம் ரூ.100 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டதாக மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், நியோமேக்ஸ் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் 12 முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி தருவதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று, அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. பொதுமக்களிடம் பெற்ற நிதியை, பினாமி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் முதலீடு செய்து சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.