ஒளி சினிமாவின் ஆன்மா எனில், நிழல் அதன் நிசப்தமான குரல். அது வெறும் இருளல்ல. ஒரு காட்சியின் உணர்ச்சி, மனநிலை, தத்துவம், கூடவே கதையின் மறைமுகமான அடுக்குகளையும் வெளிப்படுத்தும் சக்தி கொண்டது. ஒளி கண்களுக்குத் தெரியலாம், ஆனால் நிழல் நேராக மனதுடன் பேசுகிறது. சினிமா வரலாற்றில் பல ஒளிப்பதிவாளர்கள் நிழலைப் பயன்படுத்தி காட்சிகளை மட்டும் அழகுபடுத்தாமல், கதையின் உள் உலகையும் செதுக்கியுள்ளனர்.
கே.எஸ். பிரசாத் – மர்மத்தைச் செதுக்கிய நிழல்கள்: ஆரம்பகால வண்ணப்படங்களில் ஒன்றான ‘புதிய பறவை’யில் கே.எஸ். பிரசாத், நிழலின் சக்தியை அசாதாரணமான அளவுக்குக் கொண்டு சென்றார். நீண்ட நிழல்களால் மர்மத்தைச் செதுக்கி, வண்ணப்படங்களின் ஆரம்ப காலத்தில் கடினமான வண்ண அடுக்குகளை உருவாக்கினார். ஒளி மற்றும் நிழலின் நுண்ணிய சமநிலையால் அவர் அமைத்த காட்சிகள் இன்றுவரை ஒரு பாடமாக நிற்கின்றன.