தமிழக அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தர மத்திய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய சட்டப்பூர்வ நடவடிக்கை குறித்து ஆலோசிக்கும் வகையில் அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் வரும் 9-ம் தேதி நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நீட் விலக்கு சட்ட மசோதா விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசியதாவது: கடந்த 2006-ம் ஆண்டில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வையும் ரத்து செய்து, பள்ளிகளில் 12 ஆண்டுகள் பயிலும் பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில், சமூகநீதியையும், அனைத்து பிரிவு மாணவர்களுக்கு சமவாய்ப்பையும் உறுதி செய்யும் முன்னோடி சேர்க்கை முறையை முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். சமூகநீதியை நிலைநாட்டி, கிராமப்புறங்களில் வாழும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கும் இந்த முறையால்தான் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக, மாநிலம் முழுவதும் சிறப்பான மருத்துவ சேவைகள் கிடைத்து வருகின்றன.