டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக எரிந்த நிலையில் பணம் எடுக்கப்பட்ட விவகாரத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு உள் விசாரணை நடத்தி அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வெளிவராத நிலையில், குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இந்த விவகாரத்தை குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருப்பது மக்கள் மத்தியில் விவாதத்தை உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார் வரும்போது, அதுகுறித்து சாதாரண மக்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்கு பதிவதைப்போல் வழக்கு பதிவு செய்ய முடியாது. நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை நீதிபதிகளைக் கொண்ட உள் விசாரணைக் குழு முடிவு செய்து அதன்மீது நடவடிக்கை எடுக்கும்.