ஓய்வுபெற்ற நீதிபதிகள் உடனே அரசியலுக்கு வருவது மற்றும் முக்கிய பதவிகளை வகிப்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற டி.ஒய்.சந்திரசூட் பேசியுள்ளார். ‘‘நீதிபதிகளாக இருந்து ஓய்வுபெற்றவர்கள் உடனடியாக ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேரும்போது, அவர்கள் பணியில் இருக்கும்போது அரசியல் தலையீடு இருந்திருக்குமோ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும். நீதிபதிகள் அரசியல் தலையீடுகளுக்கு அப்பாற்பட்டு பணியாற்ற வேண்டும் என்று சமூகம் எதிர்பார்க்கிறது. நீதிபதி பதவியில் இருப்பவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இந்திய குடிமகனுக்கான அனைத்து உரிமையும் உண்டு’’ என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்து பின்னர் ஆளுநர், எம்பி., போன்ற பதவிகளைப் பெற்ற நீதிபதிகளை மனதில் வைத்து அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். நீதிபதிகளாக இருந்துவிட்டு அரசியல் பதவிகளுக்கு வருபவர்கள் மீதான விமர்சனம் நாட்டில் நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.