நீலகிரி: நீலகிரியில் கனமழை காரணமாக குன்னூர் உதகை இடையே மலை ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்து ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், குன்னூர் – உதகை இடையே மலை ரயில் தண்டவாளத்தில் ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் தண்டவாளத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உதகையில் இருந்து வந்த மலை ரயிலானது கேத்தி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. தகவல் அறிந்த வந்த ரயில்வே ஊழியர்கள் 10க்கு மேற்பட்டோர் தண்டவாளத்தில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மரத்தை வெட்டி அகற்றிய பிறகு மலை ரயில் சேவை தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post நீலகிரியில் கனமழை எதிரொலி: குன்னூர் – உதகை இடையே மலை ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.