ஒரத்தநாடு: நெல்லின் ஈரப்பதம் 22 சதவீதமாக உயர்த்துவது குறித்து தஞ்சை மாவட்டத்தில் ஒன்றிய அரசு குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறிய மழை மற்றும் அதிக அளவிலான பனிப்பொழிவு காரணமாக அறுவடை பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை அதிகரித்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக அதிகப்படுத்தி கொள்முதல் செய்ய வேண்டும் என தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது. இதனால் ஒன்றிய உணவு துறையின் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குநர்கள் நவீன், ப்ரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர், டெல்டா மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் மற்றும் சீதோஷ்ண நிலை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
இதில் முதல் கட்டமாக தஞ்சாவூர் வந்த ஒன்றிய குழு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குநர் அண்ணாதுரை, கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஆகியோருடன் ஒரத்தநாடு பகுதிக்கு உட்பட்ட புதூர், புலவன் காடு, தெலுங்கன் குடிக்காடு, பாப்பாநாடு உள்ளிட்ட பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லின் ஈரப்பதத்தை நேற்று ஆய்வு செய்தனர். இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை கூறுகையில், ‘குழுவினரின் அறிக்கை விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். 5 லட்சத்து 76 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் இதுவரை தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வளவு நெல் தேங்கி உள்ளது. அதன் ஈரப்பதம் எவ்வளவு என்பது குறித்தும் ஆய்வு செய்கின்றனர்’ என்றார். இன்று (23ம்தேதி) திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் நாளை (24ம்தேதி) காலை மயிலாடுதுறை மாவட்டத்திலும், மதியம் கடலூர் மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
The post நெல்லின் ஈரப்பதம் 22% உயர்வா? தஞ்சையில் ஒன்றிய குழு ஆய்வு appeared first on Dinakaran.