சென்னை: சென்னை பச்சையப்பன் கல்லூரியில் திமுக எம்.பி. ஆ.ராசா கலந்து கொண்டு பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரி வாசகர் வட்டம் 7ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ‘சொல்’ ஆண்டு மலர் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 7ம் தேதி கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பங்கேற்று உரையாற்றியிருந்தார். இந்நிலையில், அனுமதி பெறாமல் ஆ.ராசாவை பேச அழைத்ததாக கூறி பச்சையப்பன் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளராக இருந்த முனைவர் ஆ.தே.ரேவதி, கல்லூரி நிர்வாகத்தால் சமீபத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முனைவர் ரேவதி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், நிகழ்ச்சி நடத்த கல்லூரி அனுமதி அளித்த பின்னரே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தியதாக தவறான காரணத்தைக்கூறி தாம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி வி.பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்த போது அரசு சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, சஸ்பெண்ட் செய்யப்பட்டது உச்சபட்ச நடவடிக்கை. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, முனைவர் ரேவதியின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
The post பச்சையப்பன் கல்லூரி நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ.ராசா கலந்து கொண்டதால் பேராசிரியரை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.