சண்டிகர்: ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான பஞ்சாப் அரசில், இல்லாத துறைக்கு 20 மாதங்களாக குல்தீப் சிங் தலிவால் அமைச்சராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை முன்வைத்து பாஜக கடும் விமர்சனம் பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் மாநில அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் 20 மாதங்களாக "இல்லாத" துறைக்கு தலைமை தாங்கி வருவது கண்டுபிடடிக்கப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் நிர்வாகத்தை கேலி செய்து வருவதாக பாஜக மூத்த தலைவர் பிரதீப் பண்டாரி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பிரதீப் பண்டாரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் ஆட்சியை கேலிக்குரியதாக ஆக்கி உள்ளது. ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவர், இல்லாத ஒரு துறையை 20 மாதங்களாக நடத்தியுள்ளார். ஒரு அமைச்சர் இல்லாத துறையை நடத்துகிறார் என்பது கூட முதல்வருக்குத் தெரியாது என்பதை கற்பனை செய்து பாருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.