புதுடெல்லி: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை முடுக்கிவிடுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வது, தனியார் தொழில்துறை முதலீட்டு வளர்ச்சி, குடும்பங்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவது, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்தி ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அனைவரும் அமைதி காக்குமாறு சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமனை பட்ஜெட் உரை நிகழ்த்த சபாநாயகர் அழைத்தார். பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன் நிர்மலா சீதாராமன் கூறியது: "2025-26-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பிக்கிறேன். வளர்ச்சியை முடுக்கிவிடுவது, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வது, தனியார் தொழில்துறை முதலீட்டு வளர்ச்சி, குடும்பங்களின் எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துவது, வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரின் சக்தி ஆகியவற்றில் மத்திய அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகளை இந்த பட்ஜெட் கருத்தில் கொண்டுள்ளது.