புதுடெல்லி: பட்ஜெட்டில், மொத்த செலவினம் ரூ. 1,04,025 கோடி குறைக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவு ரூ. 92,682 கோடி குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கல்வி, சுகாதாரம், சமூக நலன், விவசாயம் உள்ளிட்ட துறைகள் பாதிக்கப்படும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம், மத்திய பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "2025-26 பட்ஜெட்டின் ஒரு சிறிய விஷயம் என்னவென்றால், வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரையும் பிஹார் வாக்காளர்களையும் பாஜக கவர்ந்திழுக்கிறது. இந்த அறிவிப்புகளை பிஹாரின் 3.2 கோடி வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரும் 7.65 கோடி வாக்காளர்களும் வரவேற்பார்கள்.