சீனாவில் வேலையிழப்பு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான சீன இளைஞர்கள் வேலையிழப்பை மறைத்து பணியில் இருப்பதாக நடித்து வருகின்றனர். இதற்காக அவர்கள் தினசரி ரூ.290 கட்டணம் செலுத்தி போலி அலுவலகங்களுக்கு செல்கின்றனர்.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவின் பொருளாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சீனாவை தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. இதன்காரணமாக அந்தநாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. செல்போன் உற்பத்தி, கார் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டிருக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி இந்தியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. சீனாவின் முதுகெலும்பாக கருதப்படும் ரியல் எஸ்டேட் துறை பெரும் சரிவை சந்தித்து வருகிறது.