கூடலூர்: பந்தலூரில் பிடிபட்ட புல்லட் யானையை ஆனைமலை புலிகள்‌ காப்பகத்தில்‌ அறிவியல்‌ சார்ந்த அணுகுமுறைகளில்‌ குறைந்த மனித இடையூறுகளுடன்‌ கண்காணிக்கப்பட்டு, பின்‌ அடர்‌ வனப்பகுதியில்‌ கொண்டு விடப்படும்‌ என கூடலூர் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியது: “நீலகிரி மாவட்டம், கூடலூர்‌ வனக்கோட்டம்‌, சேரம்பாடி மற்றும்‌ பந்தலூர்‌ பகுதிகளில்‌ கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை பொதுமக்களின்‌ குடியிருப்புகளை தொடர்ந்து சேதம்‌ செய்து வந்தது. பொது மக்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌ யானையின்‌ நலனை கருத்தில்‌ கொண்டும்‌ இந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள்‌ விரட்டுவதற்காக 24 மணி நேரமும்‌ கூடலூர்‌ வனக்கோட்டத்தைச்‌ சார்ந்த அனைத்து முன்களப்பணியாளர்களும்‌, இதர கோட்ட முன்‌ களப்பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.