பனாமா சிட்டி: மத்திய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது பனாமா தேசம். அங்கு தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட சுமார் 300 பேரை (பெரும்பாலும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள்) விடுதி ஒன்றில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
பனாமாவில் அடைக்கப்பட்டுள்ள 300 பேரில் இந்தியர்கள் மட்டுமல்லாது நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவை சேர்ந்தவர்களும் உள்ளதாக தகவல். இதில் சிலரை அவர்களது தாயகத்துக்கு அமெரிக்கா திரும்ப அனுப்புவதில் சிக்கல் இருக்கின்ற காரணத்தால் பனாமாவை ‘ஸ்டாப் ஓவர்’ பாயிண்டாக பயன்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.