மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனைய டெர்மினல்-2 வருகையின் உள்பகுதியில், மீண்டும் ப்ரீபெய்டு டாக்சி புக்கிங் சேவை கவுன்டர்களை துவக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தின் உள்பகுதியில், கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக ப்ரீபெய்டு டாக்சி கவுன்டர்கள் இயங்கி வந்தன. பின்னர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டுமானப் பணிகள் காரணமாக, வருகையின் உள்பகுதியில் இருந்த ப்ரீபெய்டு டாக்சி புக்கிங் கவுண்டர் வெளிப் பகுதிக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்ற பிறகும், பன்னாட்டு முனைய வருகையின் உள்பகுதியில் ப்ரீபெய்டு டாக்சி புக்கிங் கவுன்டர்கள் மீண்டும் மாற்றப்படவில்லை. இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் ஏராளமான பயணிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
ஏனெனில், அவர்களில் பலர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தங்களின் வீடுகளுக்கு அல்லது தங்கியிருக்கும் இடங்களுக்கு, விமானநிலையத்தின் வருகை பகுதியில் இருந்த ப்ரீபெய்டு டாக்சி புக்கிங் கவுன்டரில் கட்டணம் செலுத்தி பதிவு செய்துவிட்டு, அவர்களின் மூலம் கிடைக்கப் பெற்ற டாக்சிகளில் சென்று பயனடைந்து வந்தனர். இது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வந்தது.
பின்னர் கட்டுமானப் பணிகள் காரணமாக, விமானநிலைய உள்பகுதியில் இருந்த ப்ரீபெய்டு டாக்சி புக்கிங் கவுன்டர், விமான நிலையத்துக்கு வெளியே போர்டிகோ பகுதிக்கு மாற்றப்பட்டது. எனினும், விமானநிலைய உள்நாட்டு முனையத்தில் வழக்கம் போல் வருகையின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதிகளில் ப்ரீபெய்டு டாக்சி புக்கிங் கவுன்டர்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தின் வருகை பகுதியில் இருந்த ப்ரீபெய்டு டாக்சி புக்கிங் கவுன்டரை வெளியில் மாற்றப்பட்டதால் பெரும்பாலான பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதுகுறித்து விமானநிலைய நிர்வாகத் தரப்பில், தற்போது கட்டுமானப் பணி நடப்பதால், தற்காலிகமாக ப்ரீபெய்டு டாக்சி புக்கிங் கவுன்டர் இடமாற்றம் செய்யப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்ததும், மீண்டும் பன்னாட்டு விமானநிலைய உள்பகுதிக்கு மாற்றப்படும் என்று தகவல் கூறிவந்தனர்.
எனினும், தற்போது புதிய விமான முனையம் செயல்பாட்டுக்கு வந்து பல மாதங்களான போதிலும், விமானநிலைய உள்பகுதிக்கு ப்ரீபெய்டு டாக்சி புக்கிங் கவுன்டரை மீண்டும் இடமாற்றம் செய்யப்படவில்லை. இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் ஏராளமான பயணிகள் வெளியில் வந்து டாக்சி பிடிக்க முயற்சித்தால், அவர்களை தனியார் டாக்சி டிரைவர்கள் மற்றும் புரோக்கர்கள் சூழ்ந்து, அதிக கட்டணம் வசூலித்து, நடுவழியில் கூடுதல் கட்டணம் கேட்டு அடாவடி செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தின் உள்பகுதியில் மீண்டும் ப்ரீபெய்டு டாக்சி புக்கிங் கவுன்டரை அமைக்க வேண்டும். அத்தகைய டாக்சிகளில் வெளிநாட்டு பயணிகளிடம் அரசும் இந்திய விமானநிலைய ஆணையமும் நிர்ணயித்த கட்டணங்களை மட்டும் வசூலிக்க வேண்டும். அதற்கான உரிய கட்டண ரசீதுகளும் கொடுக்கப்பட வேண்டும். இத்தகைய கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பன்னாட்டு முனைய உள்பகுதியில் மீண்டும் ப்ரீபெய்டு டாக்சி புக்கிங் சேவை கவுன்டரை துவங்குவதற்கு விமானநிலைய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமானப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
The post பன்னாட்டு முனைய வருகை உள்பகுதியில் ப்ரிபெய்டு டாக்சி புக்கிங் சேவை மீண்டும் துவக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.