புதுடெல்லி: "பலவீனமான இந்தியாவை விரும்பும் சக்திகளை ஊக்குவித்த வரலாற்றை காங்கிரஸ் கட்சி கொண்டுள்ளது" என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா விமர்சித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்திய அரசுக்கு எதிராகவும் போராடுகின்றன என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று கூறி இருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு பாஜக கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளது. ராகுல் காந்தியின் கருத்துக்கு பதில் அளித்துள்ள ஜே.பி.நட்டா, “பலவீனமான இந்தியாவை விரும்பும் அனைத்து சக்திகளையும் ஊக்குவித்த ஒரு வரலாற்றை காங்கிரஸ் கொண்டுள்ளது. அவர்களின் அதிகார பேராசை, நாட்டின் ஒருமைப்பாட்டில் சமரசம் செய்தது, நம்பிய மக்களின் முதுகில் குத்தியது. ஆனால், இந்திய மக்கள் புத்திசாலிகள். ராகுல் காந்தியையும் அவரது அழுகிய சித்தாந்தத்தையும் எப்போதும் நிராகரிப்பதாக அவர்கள் முடிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.