பல்லாவரம்: சென்னையின் நுழைவு வாயிலாக தாம்பரம், பல்லாவரம் பகுதிகள் உள்ளன. சென்னையில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதனால் பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையிலும் வாகன ஓட்டிகள் எளிதாக போக்குவரத்து நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிப்பதற்காக கடந்த ஆண்டு பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த சில மாதங்களாக போதிய பராமரிப் பின்றி காணப்படுகிறது. குறிப்பாக, பாலத்தின் வெளிப்புற பக்கவாட்டு சுவரில் ஆங்காங்கே ஆலமரம், அத்தி, அரசமரம் ஆகிய மிகப்பெரிய அளவில் வளரக்கூடிய மரங்கள் அதிகளவில் வளர தொடங்கியுள்ளன. இவற்றை முறையாக அப்புறப்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் பாலங்கள் உறுதியாக இருந்து பொதுமக்களுக்கு பயனளிக்கும்.
இல்லை யென்றால் விரைவில் மரங்கள் மிகப்பெரிய விருட்சமாக வளர்ந்து, பாலத்தையே பெயர்த்து எடுக்கும் நிலையுள்ளது. பாலம் சேதமடைந்து வருவதால் மக்களின் வரிப்பணமும் வீண் விரயமாகியுள்ளது. இதை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பல்லாவரம், தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் வண்டலூர் உள்ளிட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள மேம்பாலங்களை மாதந்தோறும் முறையாக பராமரித்து, அவற்றில் வளர்ந்துள்ள செடி, கொடி மற்றும் மரங்களை அகற்றி, மேலும் வளராமல் தடுக்க நிரந்தரதீர்வுகாண வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பல்லாவரம் மேம்பாலத்தில் வளர்ந்து வரும் மரங்களால் உறுதிதன்மை இழக்கும் ஆபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.