தமிழர்களுடைய மரபு, கலாச்சாரம், ஜனநாயகப் பாங்கு, ஆட்சியில் மக்களுடைய பங்களிப்பு என்ற மகிமை, மாண்பை உத்திரமேரூர் கல்வெட்டு சொல்கின்றது. மக்களாலே தங்கள் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது உலகத்துக்குப் பறைசாற்றிய இனம் தமிழ் இனம். பழந்தமிழர் அரசியலில் சோழர்கால குடவோலை தேர்தல் முறை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல் முறையாகும்.
இந்த முறையில் கிராமத்தின் பகுதிவாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை முதலில் ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். குடவோலை முறை 9-ம் நூற்றாண்டு முதல் 16-ம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது என்பதை பல கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆதாரமாக கி.பி. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தக சோழன் காலத்திய மூன்று கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இதில் இரண்டு உத்திரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன.