சென்னை: அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் – விடைகள் நேரத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் மரகதம் குமரவேல், அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசின் நிலைப்பாடு என்ன? அது எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி எழுப்பினார்.
இது குறித்து சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது; அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டிருக்கும் முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருப்பதாகக் கூறினார். அரசு ஊழியர்களுடைய நலனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். அந்த வகையில் ஊழியர்களுடைய கோரிக்கைகள் அரசு மிகுந்த கவனத்தோடு பரிசிலீத்து வருகிறது. நிதிநிலை அறிக்கையில் கூட அரசு ஊழியர்களுக்கான தேவையான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறேன்.
தொடர்ந்து அவர்களுக்கு கோரிக்கைகள் இருந்து வருகின்றன. பழைய ஓய்வூதிய திட்டத்தை பொறுத்தவரை அரசு ஒரு குழுவை நியமித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவுக்கான கால வரையறைகள் தரப்பட்டிருக்கிறது. அந்த குழுவை பொறுத்தவரை பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர்கள் சங்கங்கள் பல கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதனை முதலமைச்சரிடம் கலந்து பேசி கோரிக்கைகளை அரசு மிகுந்த கவனத்தில் எடுத்து கொண்டு உள்ளது. அவர்கள் கேட்டிருக்க கூடிய கோரிக்கைகளை குழுவிடம் விவாதித்து உரிய நேரத்தில் சரியான முடிவை அரசு மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
The post பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து உரிய நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.