திருவனந்தபுரம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் ரள மாநிலம் கொச்சி இடப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (65) என்பவரும் இறந்தார். துபாயில் பணிபுரிந்து வந்த இவர், கடந்தாண்டுதான் ஊருக்கு திரும்பினார். குடும்பத்துடன் துபாயில் வசித்து வரும் அவரது மகள் அஸ்வதி, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்புதான் ராமச்சந்திரன், மனைவி ஷீலா, மகள் அஸ்வதி, அவரது 2 குழந்தைகள் ஆகியோர் ஐதராபாத் வழியாக காஷ்மீருக்கு சுற்றுலா சென்றனர். நேற்று பஹல்காம் பகுதிக்கு ராமச்சந்திரனும், அஸ்வதியும் சென்றனர். மற்ற அனைவரும், ஓட்டலிலேயே தங்கியிருந்தனர். பஹல்காம் பகுதியை சுற்றி பார்த்தபோதுதான் தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில் ராமச்சந்திரனும் இறந்தார். மகள் அஸ்வதியின் கண்ணெதிரே இந்த சம்பவம் நடந்தது. அதை பார்த்து அஸ்வதி கதறி அழுதார். ராமச்சந்திரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு இன்று கொச்சிக்கு கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கேரளாவை சேர்ந்தவர் பலி: மகள் கண்ணெதிரே நடந்த துயரம் appeared first on Dinakaran.