புதுடெல்லி: பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் ஏவுதளங்களை வெற்றிகரமாக அழித்துள்ளதாக அறிவித்துள்ள இந்திய ராணுவம் அதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ராணுவம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மே 8 – 9 இடைப்பட்ட இரவில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபின் பல பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதல் முயற்சிகளுக்கான பதிலடியாக இந்திய ராணுவம் பயங்கரவாதிகளின் ஏவுதளங்களைக் குறிவைத்து அழித்தது. அவை தடம் தெரியாமல் அழிக்கப்பட்டன. இந்த ஏவுதளங்கள் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அமைந்துள்ளன. இங்கிருந்துதான் இந்திய மக்கள் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் பயங்கரவாத தாக்குதல் சதிகள் முன்பு நடத்தப்பட்டன. இந்திய ராணுவத்தின் அதிரடியான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் மற்றும் பயங்கரவாதிகளின் இயங்குதிறனுக்கு பலத்த அடியாக இறங்கியுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.