டெல்லி: செய்தி தொலைக்காட்சிகள் உள்பட பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் மலையில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதையடுத்து பாகிஸ்தான் அரசின் அதிகாரபூர்வ சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் கடந்த 4 நாட்களுக்கு முன்பே இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்திய அரசுக்கு எதிராகவும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் வீடியோ வெளியிடக்கூடிய 16 பாகிஸ்தான் பின்னணி கொண்ட யூடியூப் சேனல்களுக்கு தற்போது உள்துறை அமைச்சகத்தின் வாயிலாக தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவம் குறித்து தவறான தகவல்களை வீடியோக்களாக வெளியிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி சேனல்கள், விளையாட்டுத் தொடர்பான Dawn News, SAMAA TV, ARY NEWS, Geo News உள்ளிட்டவற்றின் யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரின் யூடியூப் சேனலுக்கும் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தி சேனல்கள், விளையாட்டுத் தொடர்பான 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை..!! appeared first on Dinakaran.