மும்பை: நடப்பு மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இலங்கையின் கொழும்பு நகரில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் இந்திய அணியினர் கைகுலுக்க மாட்டார்கள் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த வாரம் நிறைவடைந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொண்டன. அந்த மூன்று போட்டியிலும் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தனர். மேலும், பாகிஸ்தான் அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி வசமிருந்து ஆசிய கோப்பையைப் பெற முடியாது என இந்திய அணி தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு இந்த தொடரில் கோப்பை வழங்கப்படவில்லை.