
காபூல்: பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ஆப்கனிஸ்தானை சேர்ந்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கனிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் செயல்படும் தெக்ரிக் இ-தலிபான்களுக்கு (டிடிபி) ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாகக் குற்றம் சாட்டி வரும் பாகிஸ்தான், ஆப்கனில் உள்ள தெக்ரிக் இ தலிபான்களை குறிவைத்து கடந்த வாரம் ராணுவ தாக்குதல் நடத்தியது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆப்கனிஸ்தான், பதில் தாக்குதலை நடத்தியது. இதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

