*பட்ஜெட் பிரண்ட்லி டூரிஸ்ட் ஸ்பாட்
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை விவசாயிகளுக்கு பாசன நீராகவும், மக்களுக்கு குடிநீராகவும், சுற்றுலா பயனிகளுக்கு சுற்றுலாத் தலமாகவும், மீனவர்களுக்கு மீன்பிடித் தொழிலாகவும் என பல்வேறு வகையில் மக்களுக்கு பயன்பெற்று வருகிறது.தேனி மாவட்டத்தில் வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி போன்ற மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் உருவாகும் மழைநீர் வைகை ஆற்றில் வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது.
இந்த வைகை ஆற்றுக்கு குறுக்கே அணை கட்டி அந்த தண்ணீரை சேமித்து வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆண்டிபட்டி அருகே அணை கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 1959ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது.
இந்த அணையின் மொத்த உயரம் 111 அடியாககும். 71 அடி வரை தண்ணீரை தேக்கி கொள்ளலாம். இந்த அணையில் இருந்து வைகை பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 36 ஆயிரத்து 109 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது. அணையில் இருந்து பெரியார் பாசனத்தின் கீழ் 1 லட்சத்து 50 ஆயிரத்து 43 ஏக்கர் பரப்பளவில் பாசனம் செய்யப்படுகிறது.
இதில் 45 ஆயிரத்து 41 ஏக்கர் இருபோக பாசன பபகுதியாகவும், 85 ஆயிரத்து 563 ஏக்கர் ஒருபோக பாசன பகுதியாகவும் , 19 ஆயிரத்து 439 ஏக்கர் திருமங்கலம் பிரதான கால்வாய் பகுதியாகவும், 38 ஆயிரத்து 248 ஏக்கர் விரிவாக்கப்பட்ட பெரியார் பிரதான கால்வாயாகவும் உள்ளது.
இந்த அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் தொடர்ந்து பங்களித்து வரும் வகையில் மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாகவும் உள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த வைகை அணை பகுதியில் மீன்பிடி தொழிலும் நடந்து வருகிறது.
மக்கள் விரும்பும் பூங்கா
வைகை அணை கட்டுவதற்கு ரூ.3 கோடியை 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதில் அணை கட்டி முடித்தது போக மீதம் 40 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்தில் அணைப் பகுதியில் பூங்கா கட்டப்பட்டு பொதுமக்கள் சுற்றிபார்க்கும் வகையில் அமைக்கப்பட்டது.
தற்போது இந்த பூங்கா தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. பூங்காவிற்கு தேனி மாவட்டம் மட்டுமல்லாமல் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகள் வீட்டிலிருந்து உணவு சமைத்து குடும்பத்துடன் சுற்றிபார்த்து உண்டு மகிழ்வார்கள்.
வைகை அணை குடும்பத்துடன் சென்று வருவதற்கும், குழந்தைகள் குஷியாக விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. பிரமாண்டமாக எழுந்து நிற்கும் அணையின் இரண்டு புறங்களும் வலதுகரை பூங்கா, இடதுகரை பூங்காக்கள் உள்ளது.
இந்த இரண்டு கரை பூங்காக்களிலும் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் உள்ளது. சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதற்கு சிறுவர் பூங்கா, பெரியார் மாதிரி வைகை பூங்கா, மச்சக்கன்னி பூங்கா, பயில்வான் பார்க், யானை சறுக்கல், ஊஞ்சல், மலைகள் போல் அமைக்கப்பட்டு வரைபடங்கள், நீரூற்றுகள், புல்தரைகள், ஆங்காங்கே ஓய்விடங்கள், குழந்தைகள் குஷியாக சென்றுவர உல்லாச ரயில், படகு குழாம், இசையுடன் தண்ணீர் நடனமாடும் வகையில் அமைக்கப்பட்டு இசை நடன நீரூற்று என ஏராளமான அம்சங்கள் செய்யப்பட்டுள்ளது.
பூங்காவில் இருந்து அப்படியே அணையின் மேல் பகுதிக்கு சென்று விடலாம். அணையின் மேல் பகுதியில் இருந்து தேங்கி இருக்கும் தண்ணீர் பிரமாண்டமாக காட்சியளிக்கும். பிரமாண்டமாக காணப்படும் இந்த தண்ணீரை அருகில் இருக்கும் மலையுடன் சேர்த்து கடல்போல அலையுடன் காணும் காட்சி காண்போரை வியப்பிற்கு கொண்டு செல்லும். இந்த நுழைவு வாயிலில் பூங்காவிற்குள் செல்வதற்கு ஒரு நபருக்கு 5 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. காலை 7 மணிக்கு திறக்கப்படும் பூங்கா இரவு 7 மணி வரை இருக்கும். மாலை நேரத்தில் பூங்கா மற்றும் அணை வண்ண விளக்குகளால் காட்சியளிக்கும்.
வார விடுமுறையையொட்டி குவிந்தனர்
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை மற்றும் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்கா தேனி மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. சுற்றுலா பயணிகள் வீட்டிலிருந்து உணவு சமைத்து குடும்பத்துடன் சுற்றிபார்த்து உண்டு மகிழ்வர். வைகை அணை குடும்பத்துடன் சென்று வருவதற்கும், குழந்தைகள் குஷியாக விளையாடுவதற்கும் ஏற்ற இடமாக உள்ளது. நேற்று வார விடுமுறையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வைகை அணை பூங்காவில் குவிந்தனர்.
சிறுவர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஊஞ்சல், சறுக்குகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரும் ஏறி மகிழ்ச்சியுடன் பொழுதை களித்தனர். மேலும் சிறுவர்களுக்காக இயக்கப்படும் உல்லாச ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்து மகிழ்ந்தனர். பூங்காவில் புல்வெளிகளில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து மகிழ்ச்சியுடன் விளையாடினர்.
பூங்காவில் தனியார் மூலம் ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் ராட்டினங்களில் அதிக அளவு கூட்டம் காணப்பட்டது. வைகை அணை பூங்காவில் ஏராளமான பொழுது போக்கு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதால், காலை முதல் மாலை வரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டே இருந்தனர்.
The post பாசனம், குடிநீர், மீன்பிடித் தொழில் என அரவணைக்கும் 5 மாவட்ட மக்களின் அன்னை ‘வைகை அணை’ appeared first on Dinakaran.