கோவை: “பாஜக- அதிமுக கூட்டணி, திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது என்ற ஒற்றை குறிக்கோளோடு செயல்படுகிறது. கூட்டணியில் எந்த பிரச்சினையும் ஏற்படாது” என்று, அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை வடகோவை மத்திய உணவு பொருட்கள் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வானதி சீனிவாசன் இன்று (ஏப்.14) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். அம்பேத்கார் பிறந்தநாளை முன்னிட்டு சிலை அமைந்துள்ள பகுதிகளில் தூய்மை பணி செய்து விளக்குகளால் அவரின் படம் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் முக்கிய தலைவர்களும் நிர்வாகிகளும், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.