கோவை: “புதிய மாநிலத் தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. அண்ணாமலை டெல்லி சென்றார். அண்ணாமலை அவரைக் காட்டினார், இவரை கை காட்டினார் என்ற எந்த வம்பு சண்டைக்கும் நான் வரவில்லை. நான் போட்டியில் இல்லை,” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “நாடாளுமன்றத்தில் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதை தமிழக பாஜக வரவேற்கிறது. இந்த சட்டத் திருத்த மசோதா ஏழை இஸ்லாமியர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த விவகாரத்தில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வழக்கம்போல குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். சில அரசியல் கட்சிகள் போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள். எனவே, இச்சட்டத்தைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்க வேண்டியது எங்களுடைய கடமையாக நாங்கள் கருதுகிறோம்.