புதுடெல்லி: இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர் மீது அடிப்படை மரியாதை இல்லை என்று பாஜகவை காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்தி சாடியுள்ளார். அமித் ஷாவின் அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸின் போராட்டம் குறித்து பாஜக பகிர்ந்துள்ள படத்துக்காக அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரியங்கா காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாபாசாகேப் அம்பேத்கரை அமித் ஷா அவமதித்தார், அதனைத் தொடர்ந்து இன்று காலையில் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் அம்பேத்கர் புகைப்படத்தை அவமதித்துள்ளனர். இது அம்பேத்கரின் சிலையை உடைப்பதற்கு சமமான மனநிலையாகும். அவர்கள் அரசியலமைப்பை மாற்றப்போவதில்லை, இடஒதுக்கீட்டை ரத்து செய்யப்போவதில்லை என்று கூறுகிறார்கள். யார் அவரை நம்பப்போகிறார்கள்? அவர்களிடம் அடிப்படை மரியாதை இல்லை, பாபாசாகேப் அம்பேத்கர் நாட்டின் அரசியலமைப்பை உருவாக்கியவர். அவரைப்பற்றி நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள்.” என்று தெரிவித்தார்.