சென்னை: மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்லாவரம் கன்டோன்மென்ட் பகுதி மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட காமராஜர் நகருக்கு பாலாற்று குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீர், கழிவுநீர் கலந்து நிறம் மாறி இருந்ததாகவும், இதை அருந்திய அப்பகுதி மக்களில் 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.