சென்னை: “தமிழகத்துக்கு நிதி வழங்க மறுக்கிற மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வருகிற பிப்ரவரி 28 அன்று சென்னை வருகிறபோது, அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்ற வகையில் அந்த கருப்புக் கொடி இருக்க வேண்டும்,” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டு, தமிழக கல்வித் துறைக்கு சமக்ரா சிக்‌ஷா அபியான் திட்டத்துக்கு வழங்க வேண்டிய ரூபாய் 2,152 கோடியையும், பிஎம்ஸ்ரீ பள்ளிகளை திறக்கவில்லை எனில் ரூபாய் 5,000 கோடியையும் வழங்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்தோடு அறிவித்தார். இதை எதிர்த்து திமுக நடத்திய அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.