இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான் இடையே நீண்ட காலமாக நிலவும் பிரச்னைகளை தீர்க்க அமைதியான பேச்சுவார்த்தை பாதை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தான் ராணுவத்தின் ஆபஷேன் பன்யான் அன் மர்சூஸ் வெற்றி அடைந்தது. இந்தியாவின் தாக்குதல்களுக்கு பதிலளிக்கப்பட்டன. பாகிஸ்தான் துணிச்சலான, தன்னம்பிக்கை கொண்ட, விவேகமான நாடு என்பதை தேசமும் ஆயுதப் படைகளும் நிரூபித்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பதற்றங்களை தணிக்க உதவிய அமெரிக்கா, இங்கிலாந்து, துருக்கி, சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த கொந்தளிப்பான நேரத்தில் நம்பகமான நண்பனாக சீனா துணை நின்றது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் காஷ்மீர் விவகாரம், சிந்து நதி நீர் பகிர்வு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க அமைதியான பேச்சுவார்த்தைகளின் பாதை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதே போல, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அளித்த பேட்டியில், ‘‘காஷ்மீர் விவகாரம், சிந்து நதி நீர் ஒப்பந்தம் மற்றும் தீவிரவாதம் ஆகியவை இந்தியா உடனான முக்கிய பிரச்னைகளாக உள்ளன. எதிர்காலத்தில் நடக்கும் எந்த பேச்சுவார்த்தையிலும் இவ்விவகாரங்கள் விவாதிக்கப்படலாம். இந்தியா, குறிப்பாக அதன் தலைமை, என்றாவது ஒருநாள் கட்சி நலன்களை விட பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்றார்.
The post பிரச்னைகளை தீர்க்க பேச்சுவார்த்தை தேவை: பாகிஸ்தான் கெஞ்சல் appeared first on Dinakaran.