நியூயார்க்: முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் கால உத்தரவு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம் என்று அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க அரசு கடந்த 2019ம் ஆண்டு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, அந்நாட்டில் 68 மில்லியன் (6.8 கோடி) மக்கள் வீட்டில் ஆங்கிலம் அல்லாத வேறு மொழியைப் பேசுகிறார்கள். அமெரிக்காவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தாலும் கூட, 40 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்கள் ஸ்பானிஷ் மொழியை பேசுகிறார்கள்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர், பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக சட்டவிரோத குடியேறிகள், வெளிநாடுகளுக்கு நிதி ஒதுக்கீடு, ஆட்குறைப்பு போன்ற செயல்களில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது மொழி ரீதியான சீர்த்திருத்த உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.
அந்த வகையில் அமெரிக்காவில் 350 தேசிய மொழிகள் பேசப்படுவதாக வெள்ளை மாளிகை ஒப்புக்கொண்டது. ஆனால் அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் உட்பட நாட்டின் வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் உள்ளன. அமெரிக்க அதிபராக பில் கிளிண்டன் இருந்த காலத்தில், அரசு மற்றும் அரசு சார்ந்த அமைப்புகளில் ஆங்கிலம் அல்லாத மொழி பேசுவோருக்கு ஆதரவாக பிற மொழிகளில் கையெழுத்திடவும், குறிப்புகளை அனுப்பவும் அனுமதி அளித்தது. ஆனால் தற்போது அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவில், ‘அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் வகையில், அமெரிக்காவின் தேசிய மொழியாக ஆங்கிலம் இருக்கும். ஆங்கிலத்தை அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.
ஆங்கில மொழியானது ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த சமூகத்தின் மைய மொழியாக இருக்கும். ஒரே மொழியில் சுதந்திரமாக கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள முடியும். அதன் மூலம் அமெரிக்கா பலப்படுத்தப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பில் கிளிண்டன் கால உத்தரவில் மாற்றம்; அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம்: அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.