புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 101 தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய 98.53 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்தாண்டை விட 0.68 சதவீதம் அதிகமாகும். புதுச்சேரி அரசு பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றப்பட்டு, முதன் முறையாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கின்றனர். அதே சமயம், தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் படிக்கும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதி இருந்தனர். இத்தேர்வு முடிவு நேற்று காலை 9 மணிக்கு வெளியானது. இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் 101 பள்ளிகளை சேர்ந்த 3,881 மாணவர்கள், 3,683 மாணவிகள் என மொத்தம் 7,564 பேர் தேர்வு எழுதினர்.
நேற்று வெளியான தேர்வு முடிவுகளின்படி தனியார் பள்ளிகளில் பயின்ற 3,794 மாணவர்கள், 3,659 மாணவிகள் என 7,453 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.53 சதவீதம். கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு தேர்ச்சி விகிதம் 0.68% சதவீதம் அதிகரித்துள்ளது. புதுச்சேரி பகுதியில் உள்ள 85 தனியார் பள்ளிகளில் 3,637 மாணவர்கள், 3,289 மாணவிகள் என 6,926 பேர் தேர்வு எழுதினர். இதில் 3,561 மாணவர்கள், 3,266 மாணவிகள் என 6,827 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரி பகுதி தேர்ச்சி விழுக்காடு 98.57 சதவீதம். காரைக்கால் பகுதியில் உள்ள 16 தனியார் பள்ளிகளில் 244 மாணவர்கள், 394 மாணவிகள் என 638 பேர் தேர்வு எழுதினர். இதில் 233 மாணவர்கள், 393 மாணவிகள் என 626 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். காரைக்கால் தேர்ச்சி விழுக்காடு 98.12 சதவீதம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியீடு புதுச்சேரி, காரைக்காலில் 98.53 சதவீதம் பேர் தேர்ச்சி: கடந்தாண்டை விட 0.68% அதிகம் appeared first on Dinakaran.