இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான நிதீஷ் குமார், பிஹாரின் முதல்வராக நான்காவது முறையாகப் பொறுப்பேற்கவிருப்பதைத் தேர்தல் முடிவுகள் சொல்கின்றன. ஆனாலும், மகிழ்ச்சியில் திளைக்க முடியாத எண்களையே மக்கள் அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். நிதீஷின் ஐக்கிய ஜனதா தளம் – பாரதிய ஜனதா கட்சி கூட்டணி இணைந்து 125 இடங்களைப் பெற்றுள்ளபோதிலும், வெறும் 43 இடங்களையே தன்னுடைய சொந்தக் கட்சி வென்றிருப்பது தன் மீதான மக்கள் அதிருப்தியை அவருக்குத் துல்லியமாகவே உணர்த்தியிருக்கும்.
பிஹாரைப் பொறுத்த அளவில், பாஜக – ஐஜத கூட்டணி என்பது பல வகைகளிலும் வலுவான கூட்டணி. இரண்டும் செல்வாக்குள்ள கட்சிகள். வெவ்வேறு சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பதன் வசதிகளையும் இந்தக் கூட்டணி கொண்டிருந்ததோடு, பிரதமர் மோடியின் செல்வாக்கு மிக்க பிரச்சாரப் பலத்தையும் பெற்றிருந்தது. எதிர்ப்பக்கமோ லாலு பிரசாத் யாதவ் என்கிற பெரும் ஜாம்பவான் சிறையில் இருக்கும் சூழலில், பெரிய அனுபவங்கள் இல்லாத 31 வயது இளம் தலைவரான அவரது மகன் தேஜஸ்வியின் தலைமையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியானது ஆளும் அணியை ஒப்பிட பெரிய பலம் இல்லாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணியோடு பலவீனமான சூழலில் தேர்தலை எதிர்கொண்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் சிறப்பாகப் பங்களித்திருக்கின்றன, காங்கிரஸ் பலவீனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. ஆயினும் 110 தொகுதிகளை எதிர்க் கூட்டணி வென்றிருப்பதும், வெறும் 12 இடங்கள் போதாமையிலேயே அது ஆட்சியைத் தவறவிட்டிருப்பதும் பிஹாரிகள் மாற்றத்துக்குத் தயாராகிவிட்டார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது. எப்படியும் சாதி, மத அணித்திரட்டல் வியூகங்களைத் தாண்டி, இந்தத் தேர்தலில் ‘வேலை’, ‘வளர்ச்சி’, ‘மேம்பாடு’ எனும் சொற்கள் ஆக்கிரமிக்கலானது பிஹார் அரசியலுக்கு நல்லது.
கிட்டத்தட்ட சம பலத்துடன் இரு தரப்புகளும் இருப்பதால், துடிப்பாகச் செயலாற்றும் சட்டமன்றமாக இது திகழும் என்று தோன்றுகிறது. பிரச்சாரங்களில், ‘இதுதான் கடைசித் தேர்தல்’ என்றார் முதல்வர் நிதீஷ். ‘மக்களின் குரலாகத் திகழ்வோம்’ என்றார் தேஜஸ்வி. பாஜகவுக்கும் பொறுப்பு கூடியிருக்கிறது. மூன்று தரப்புகளும் மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயல்பட்டால், பிஹார் மக்கள் எதிர்பார்க்கும் மேம்பட்ட நல்லாட்சியை இந்தச் சட்டமன்றமே தர முடியும்.