* அரசு கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும்
* விவசாயிகள் கோரிக்கை
விராலிமலை : அன்னவாசல், விராலிமலை பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்டுள்ள செங்கரும்புகள் வரும் பொங்கல் பண்டிகை அறுவடைக்கு தயாராகி வருகின்றன தற்போது, சாய்ந்த கரும்புகளை நிமிர்த்துவதும், சோகைகளை கழித்து விடும் பணியை விவசா பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை பொங்கல் திருநாள் என்பது வெறும் நாளாக மட்டுமல்லாது தமிழ் புத்தாண்டாக பெரும்பாலான தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்றால் புத்தாடை உடுத்தி இனிப்பு பொங்கல் சமைத்து குடும்பத்தினருடன் அமர்ந்து உண்ணுவது மட்டுமல்ல பொங்கல் தினம் முழுமை அடைவதற்கு அதன் முதன்மை தேவையாக செங்கரும்புகளின் பங்களிப்பு முக்கியமானதாகும், ஆவாரம்பூ, பூளைப்பூ, மஞ்சள் கிழங்கு ஆகியவையுடன் செங்கரும்பும் இணைத்து வீட்டு வாசல்களில் தோரணமாக கட்டிவைப்பதும், வணிக நிறுவனங்களின் வாசல்களில் பொங்கல் தினத்தன்று மேற்கூறியவற்றை கட்டிவைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
10 மாத விளைச்சல் பயிராக பயிரிடப்படும் பொங்கல் கரும்புகள் விராலிமலை மற்றும் அன்னவாசல் அடுத்துள்ள சென்னப்பநாயக்கன் பட்டி பகுதியில் தற்போது நல்ல முறையில் வளர்ந்து நிற்கும் நிலையில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அறுவடை செய்வதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில், நிகழாண்டு அன்னவாசல்,விராலிமலை பகுதியில் பல நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்புகள் பெஞ்சால் புயல் ஏற்படுத்திய தாக்கத்தின் போது பெய்த மழையினால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கரும்புகள் சாய்ந்த நிலையில் இருப்பதை விவசாயிகள் தற்போது நிமிர்த்தும் பணியிலும், கூடுதலாக சோகைகளை கழித்து கரும்பின் வளர்ச்சியை நீட்டிக்கும் பணியிலும் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
அறுவடைக்கு இன்னும் இருபது நாட்களே இருக்கும் நிலையில் இக்கரும்புகள் மேலும், நன்கு வளர்ந்து கூடுதல் இனிப்புகளுடன் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று விவசாயிகள் தரப்பில் கூறுகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் மருதாம்மா மற்றும் முத்தம்மா கூறியது:
மற்ற பயிர்கள் போல கரும்பு பயிர் கிடையாது என்றும், கரும்பை பொறுத்தவரை நடவு செய்த நாளில் இருந்தே பராமரிப்பை தொடங்க வேண்டும் என்றும், பராமரிப்பில் சுணக்கம் காட்டினால் அதன் வளர்ச்சியின் நீளம் குறைந்து நல்ல விலை கிடைக்காது என்றும்..15 நாட்களுக்கு ஒரு முறை பாத்தியை சரிசெய்வதும்,சோகைகளை கழித்து விடும் பணியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும்.. மக்கள் இனிப்பை ருசிக்க நாங்கள் தொடர் பராமரிப்பு என்ற கசப்பை உணரவேண்டும் என்றும்.. நாங்களும் இனிப்புடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட அரசு கரும்பின் நீளத்தை கணக்கீடு செய்யாமல் கூடுதல் விலைக்கு விளைந்த கரும்புகள் அனைத்தையும் மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.
The post புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் அறுவடைக்கு தயாராகி வரும் பொங்கல் கரும்பு appeared first on Dinakaran.