புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். காவேரி நீர், நிலத்தடி நீர், மழை நீர் போன்ற நீராதாரங்களைப் பயன்படுத்தி வேளாண் தொழிலையே முக்கியமாகக் கொண்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கல்வி, சுகாதாரத்தில் முன்னோடி மாவட்டங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. படித்த வேலையற்றோர் சுய தொழில் தொடங்கவும், உற்பத்தி, சேவை மற்றும் வியாபார நிறுவனங்களை துவங்கவும் வழிவகை செய்யப்படுகிறது.
ஊரக மகளிர் தொழில் முனைவோரை கண்டறிந்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, தொழில் தொடங்க தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன.
இந்த திட்டங்கள் செயல்படுத்தினாலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து பெருவாரியான இளைஞர்கள் சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பை பெருக்க, மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை பெருக்க தமிழக அரசு தகுந்த நவடிக்கை எடுக்க வேண்டும் என்று இளைஞர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு புதுக்கோட்டை இளைஞர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து பொறியாளர் சதீஸ் கூறுகையில், ‘புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக இந்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் வேலை தேடி வெளி மாவட்டத்திற்கும் வெளி நாட்டிற்கும் சென்ற வண்ணம் இருந்து வருகின்றனர். தொழில் பூங்கா திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது பல நிறுவணங்கள் இங்கு வந்து தொழில் தொடங்கும். இதனால் நூற்றுக்கணக்கான வேலை வாய்ப்புகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும். சொந்த மாவட்டத்திலே படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கும்போது இளைஞர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக மாறிவிடும். இந்த அறிவிப்பு அப்படியே இருந்து விடாமல் விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றனர்.
பொறியாளர் சரவணன் கூறுகையில், ‘விவசாயத்தை நம்பியே இருந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு 200 ஏக்கரில் தொழில் பூங்கா திட்டம் வேலை தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு உந்து சக்தியாக இருக்கும். தொழில் பூங்கா செயல்பாட்டிற்கு வரும்போது நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்கும். அப்போது ஒருபுறம் வேலை கிடைத்தாலும் மற்ற துறைகள் பெரிய அளவில் முன்னேற்றம் அடையும். குறிப்பாக சேவைத்துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி அடையும். புதுக்கோட்டை தொழில் பூங்காவில் உற்பத்தி நிறுவனங்கள் வந்தாலும் அரசு மென்பொருள் நிறுவனங்களை அழைத்து வந்து அந்த துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
The post புதுக்கோட்டையில் 200 ஏக்கரில் புதிய தொழிற்பூங்கா பொறியியல் பட்டதாரி மாணவர்களுக்கு வரப்பிரசாதம் appeared first on Dinakaran.