புதுச்சேரி: ''புதுச்சேரியில் மதுபான ஆலை உரிமத்தைப் பெற ஆளுநர் அனுமதி இல்லாமல் முதல்கட்ட கடிதத்தை 8 கம்பெனிகளுக்கு தந்துள்ளதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும்'' என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நாராயணசாமி இன்று கூறியதாவது: ''மின்சார துறையை அதானியிடம் ஒப்படைக்க ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. திடீரென ரூ. 330 கோடி முதலீடு செய்து ப்ரீபெய்டு மின் மீட்டர் வாங்கி தற்போதுள்ள மீட்டர்களை மாற்ற முடிவு செய்துள்ளனர். அதையும் அதானியிடம் ஒப்படைப்பதற்கான வேலையை முதல்வரும், மின்துறை அமைச்சரும் செய்து வருகின்றனர். மின்சார புதிய கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படாது என முதல்வர் ரங்கசாமி கூறியிருந்தார். ஆனால் 2025 ஜனவரியில் மக்களுக்கு வழங்கப்பட்ட மின்சார ரசீதில் பழைய நிலுவை கட்டணத்தையும் சேர்த்து கொடுத்துள்ளனர்.