சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபெஞ்சல்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது புதுச்சேரி அருகே இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 90 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் பரிந்துரைப்படி இதற்கு ‘ஃபெஞ்சல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்துவட தமிழக கடற்கரை பகுதியில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகே நவம்பர் 30-ம் தேதி (இன்று) பிற்பகல் புயலாக கரையை கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 70-80 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.