சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனை குழு கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை:
நம்முடைய அரசின் அடுத்த நிதிநிலை அறிக்கை வரும் மார்ச் 14-ஆம் நாள் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், இந்த முக்கியமான பொருளாதார ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உங்கள் எல்லோரையும் வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளாக, அரசின் பொருளாதாரக் கொள்கைகளையும், முன்னோடி நலத்திட்டங்களையும் வடிவமைத்துச் செயல்படுத்துவதில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதற்காக உங்கள் எல்லோருக்கும் நன்றி.
இந்தப் பொருளாதார ஆலோசனைக் குழுவின் கடந்த கூட்டங்களில், அனைவருக்கும் பயன் அளிக்கத்தக்க வளர்ச்சியை தமிழ்நாட்டில் நிலைபெறச் செய்யத் தேவையான பல்வேறு கருத்துக்களை எடுத்துச் சொன்னீர்கள். அதன் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது!
தமிழ்நாட்டில் ஒரு கோடியே 14 இலட்சத்து 59 ஆயிரம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும். மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி, பெண்களுக்கு அதிகாரத்தையும், பொருளாதார உரிமையையும் வழங்கியிருக்கும் “கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்” வெளிப்படையான மற்றும் தரவுகளின் அடிப்படையிலான பயனாளிகள் தேர்வு முறை எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது! அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தால், இடைநிற்றல் குறைந்து, மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை உயர்ந்திருக்கிறது!
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு தொழில்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குத் தேவையான திறன்களை வழங்கியுள்ள “நான் முதல்வன்” திட்டம், சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது. இந்திய அளவில் மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. அடுத்ததாக, 17 இலட்சத்து 53 ஆயிரம் மாணவர்களுக்குப் பயன் அளிக்கும் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”, மாணவர்களின் வருகையையும், ஊட்டச்சத்து நிலையையும், கற்றல் திறனையும் மேம்படுத்தியிருக்கிறது.
நான் ஏற்கெனவே இங்கு பலமுறை சொன்னதுபோன்று, “விடியல் பயணத் திட்டம்” பெண்களின் பணிச்சூழல் பங்களிப்பை மேம்படுத்தி, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வித்திட்டிருக்கிறது. மருத்துவத் துறையில் செயல்படுத்தப்பட்டிருக்கும் “மக்களைத் தேடி மருத்துவம்” திட்டமும், பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் “இல்லம் தேடி கல்வி” திட்டமும், தேசிய அளவில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது.
இப்படி பல்வேறு சமூகநலத் திட்டங்களை நிறைவேற்றி வரும் அதே வேளையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் வேகப்படுத்தி, 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 40 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.
பல ஆண்டு காலமாக, தமிழ்நாட்டில் சிறந்து விளங்கும் மோட்டார் வாகன உற்பத்தி, ஜவுளி உற்பத்தி, தோல்பொருட்கள் உற்பத்தி போன்ற துறைகள் மட்டுமல்லாமல், தோல் அல்லாத காலணி உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைப் பொருட்கள் உற்பத்தி, உலகளாவிய திறன் மையங்கள் ஆகியவற்றை புதிய வளர்ச்சித் துறைகளாக முன்னிறுத்தி, இந்தத் துறைகளிலும், இந்திய அளவில் அதிக முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். இப்படிப்பட்ட தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு கட்டமைப்புத் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம். நான் முன்பே சொன்னது போன்று, நலத்திட்டங்களையும் கட்டமைப்பு மேம்படுத்துதலையும் ஒரே நேரத்தில் செய்வதற்குத் தேவையான ஆதாரங்களை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.
அண்மையில், தமிழ்நாடு போன்ற வளர்ச்சியடைந்த மாநிலங்களின் நிதிப்பகிர்வு குறித்த நமது நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி, ஒன்றிய அரசின் 16-ஆவது நிதிக் குழுவிடம் கோரிக்கை மனுவை அளித்தோம். ஒரு முற்போக்கான அணுகுமுறையை இந்த நிதி ஆணையம் கடைபிடிக்கும் என்று எதிர்நோக்கியுள்ளோம். மாநில அரசுகளின் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தில், ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் மாற்றங்களையும் ஆய்வு செய்துக்கொண்டு இருக்கிறோம். இத்தகைய சூழலில், தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான உங்களின் பரிந்துரைகளையும், ஆலோசனைகளையும் நான் எதிர்நோக்கியுள்ளேன் கடந்த மூன்றரை ஆண்டுகளில் இந்த அரசு எடுத்த பல்வேறு முன்முயற்சிகளின் பயன்களை நிலைக்கச் செய்யவும், வரும் ஆண்டுகளில் நம் மக்களின் எதிர்காலத்தை மேலும் வளம்மிக்கதாக மாற்றவும், தேவையான பயனுள்ள ஆலோசனைகளை நீங்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
The post புதுமைப் பெண் திட்டத்தால், இடைநிற்றல் குறைந்து மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கை உயர்ந்திருக்கிறது: முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு appeared first on Dinakaran.