சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மீதான மானிய கோரிகளுக்கு பதிலளித்து அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது: மூவலூர் ராமாமிருதம் அம்மையார் புதுமைப்பெண் திட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் கல்வி பயிலும் அந்தனை பெண்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவார். இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 4,95,000 மாணவிகள் பயனடைந்துள்ளனர். ரூ.721 கோடி மாணவிகளின் உயர் கல்விக்காக செலவிடப்பட்டுள்ளது. இதேபோல் தமிழ்நாட்டில் மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்காக தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 3,80,467 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பேரவையில் தெரிவித்துள்ளனர். பகுதிநேர நிரந்தர பணியாளர்கள் என வகைப்படுத்தப்பட்டது திமுக ஆட்சியில்தான். மேலும் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது, பண்டிகை முன்பணம், மகப்பேறு விடுப்பு, தற்செயல் விடுப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு பெற்று பணி நிமிர்த்தம் காரணமாக வெளி ஊர்களில் தங்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக முதல்வரின் உத்தரவு படி தோழி பணிபுரியும் விடுதிகள் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக திறக்கப்பட்ட தோழி விடுதிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2ம் கட்டமாக திருவண்ணாமலை, ஓசூர் மற்றும் புனித தோமியார் மலை உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக தோழி விடுதிகள் கட்டிமுடிக்கப்பட்டு விரைவில் முதல்வர் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க உள்ளார்.
பெண்கள் மத்தியில் அதிக வரவேற்று பெற்றுள்ள தோழி விடுதிகள் வரும் ஆண்டில் 10 இடங்களில் அமைக்கப்படும். முதியோர் நலனுக்காக 25 அன்புசோலை மையம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் ஊட்டசத்து குறைபாடு இருக்க கூடாது என்பதற்காக ஊட்டசத்து உறுதி செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அங்கன் வாடி மையங்களில் உள்ள குழந்தைகள் பரிசோதனை செய்யப்பட்டு கடந்தாண்டு 92,015 குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து இனிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 77.3 சதவீதம் குழந்தைகள் இயல்புநிலைக்கு திருப்பியுள்ளனர். இந்தாண்டு மார்ச் மாதம் வரை 74.09 சதவீத குழந்தைகள் மேம்ப்படுத்தப்பட்டுள்ளனர். திருநங்கைகளுக்கு ஊர்காவல் படையில் சேர்க்கப்படுவார்கள், புதுமை பெண் திட்டத்தில் பயனடையலாம் என்று முதல்வர் அறிவித்ததன் மூலம் திருநங்கைகள் சுயமரியாதையுடன் சமூகத்தில் வாழ்வு பெற முதல்வர் ஒளியூட்டியுள்ளார்.
The post புதுமைப்பெண் திட்டத்திற்கு இதுவரை ரூ.721 கோடி செலவு: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.