புதுச்சேரி: ஒன்றிய அரசு உத்தரவை பின்பற்றி, புதுச்சேரியில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு `ஆல் பாஸ்’ வழங்கும் முறை ரத்து செய்யப்படுகிறது என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். ஒன்றிய அரசு கடந்த 2009ம் ஆண்டு கொண்டுவந்த கட்டாய கல்வி உரிமை உரிமை சட்டத்தின்கீழ் 8ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கும் ஆல்பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற `ஆல் பாஸ்’ முறையை ஒன்றிய அரசு ரத்து செய்து நேற்று முன்தினம் அரசாணை வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதேசமயம், தேஜ கூட்டணி ஆட்சி நடைபெறும் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி சட்டசபையில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் நேற்று கூறியதாவது:
மாணவர்களின் கல்வித் தரத்தை கருத்தில் கொண்டு 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு `ஆல் பாஸ்’ வழங்கும் முறையை ரத்து செய்து ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டில் புதுச்சேரி இருக்கிறது. எனவே, ஒன்றிய அரசு எத்தகைய உத்தரவு பிறப்பித்துள்ளதோ, அந்த உத்தரவை புதுவை அரசும் ஏற்று செயல்படுத்தும். இனி 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் வழங்கும் முறை ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
The post புதுவையில் 5, 8ம் வகுப்புக்கு இனி `ஆல் பாஸ்’ கிடையாது: கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு appeared first on Dinakaran.