*அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து ரூ.1.22 கோடியில் மகளிர் குழு கடனுதவி வழங்கினார்
ஓட்டப்பிடாரம் : சவலாப்பேரியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 28வது கிளையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.1 கோடியே 22 லட்சம் மதிப்பிலான வங்கி கடனுக்கான காசோலைகளை வழங்கினார்.
புளியம்பட்டி அருகே உள்ள சவலாப்பேரியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மக்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையேற்று சவலாப்பேரியில் மத்திய கூட்டுறவு வங்கியின் 28வது கிளை அமைக்கப்பட்டு திறப்பு விழா, நேற்று நடைபெற்றது. மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மத்திய கூட்டுறவு வங்கி கிளையை திறந்து மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.1 கோடியே 22 லட்சம் மதிப்பிலான கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
தொடர்ந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஓட்டப்பிடாரம் ஒரு காலத்தில் மிகவும் பின்தங்கிய பகுதியாக இருந்தது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வந்துள்ளார். அரசு சார்பில் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் துவங்கப்பட்டு உள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் என்று ஆட்சி நடத்தி வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில்தான் பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டு அவர்கள் உயர்வதன் மூலம் பொருளாதாரம் உயரும் என்ற வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் அரசு நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் வகையில் விடியல் பேருந்து பயணம், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து அதை நிறைவேற்றி வருகிறார்.
மேலும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்களுக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கும் வகையில் வரும் ஜூலை 15 அன்று சிறப்பு முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. இதில் விடுபட்ட அனைத்து பெண்களுமே பயன்பெற வேண்டும் என்ற வகையில் திட்டத்தில் சேருவதற்கு பல்வேறு தளர்வுகளை முதல்வர் அறிவித்துள்ளார், என்றார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, யூனியன் முன்னாள் சேர்மன் ரமேஷ், நபார்டு வங்கி துணை பொதுமேலாளர் சுரேஷ் ராமலிங்கம், திமுக ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ் காந்தி, ராமசாமி, கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் ராஜேஷ், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் காந்திநாதன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் சரவணன், உதவி பொதுமேலாளர் சீனிவாசன், பூமி செல்வி, கிளை மேலாளர் கோப்பெருந்தேவி, ராம்ராஜ், காசாளர் ராஜலட்சுமி, கூட்டுறவு வங்கி செயலாளர்கள் முருகன், கென்னடி, தம்பிராஜ், மாரிமுத்து, சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post புளியம்பட்டி அருகே சவலாப்பேரியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கிளை திறப்பு appeared first on Dinakaran.