சென்னை : சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கான வசதிகள் சிறப்பான முறையில் செய்து தரப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குகளை நீதிபதிகள் எம்.எஸ்..ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு விசாரித்து வருகிறது. மேலும் சிறைவாசிகள் தொடர்பான வழக்குகளையும் இந்த அமர்வுதான் விசாரிக்கிறது. இந்த நிலையில் இரு நீதிபதிகளும் சென்னை புழல் மத்திய சிறையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்து அவர்களிடம் கேட்டு அறிந்தனர். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் தனிமை சிறை, உயர் பாதுகாப்பு சிறை, பெண்கள் சிறை ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.
அதேபோல் சிறைத்துறை பதிவேடுகளையும் நீதிபதிகள் பார்வையிட்டனர். மேலும் சிறையில் உள்ள சமையல் அறைக்கு சென்று சிறைவாசிகளுக்கு சமைக்கப்படும் உணவுகளையும் ருசி பார்த்து ஆய்வு செய்தனர். பெண் சிறைவாசிகளிடம், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உரிய வகையில் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதிகள், புழல் சிறையில் சிறைவாசிகளுக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படுவதாகவும் கழிப்பறைகள் தூய்மையாக பராமரிக்கப்படுவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளனர். சிறைவாசிகளுக்கு வாரத்தில் 2 முறை முட்டைகள் வழங்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், பெண் சிறை வாசிகள் சிறை வளாகத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பணிபுரிவதாகவும் இதன் மூலம் அவர்கள் மாதத்திற்கு ரூ.7,500 ஊதியம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
The post புழல் சிறையில் கைதிகளுக்கான வசதிகள் சிறப்பான முறையில் பராமரிப்பு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு appeared first on Dinakaran.