பெங்களூரு: பெங்களூரு பாஜக எம்.பி.யும், பாஜக இளைஞர் அணி தலைவருமான தேஜஸ்வி சூர்யா தமிழகத்தை சேர்ந்த கர்னாடக சங்கீத பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தை நேற்று திருமணம் செய்துகொண்டார். பெங்களூருவில் நடந்த இந்த திருமணத்தில் பாஜக மூத்த தலைவர் பி.எல்.சந்தோஷ், தமிழக தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞரான தேஜஸ்வி சூர்யா பாஜக இளைஞர் அணியில் தீவிரமாக செயல்பட்டார். அவர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றார். இந்நிலையில், இவருக்கும் தமிழகத்தை சேர்ந்த கர்னாடக சங்கீத பாடகியான சிவ ஸ்கந்த பிரசாத்துக்கும் சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. பரத நாட்டியமும் கற்றுள்ள சிவ ஸ்கந்தபிரசாத் சமூக வலைத்தளங்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்களை கொண்டுள்ளார். பொன்னியின் செல்வன் – 2 படத்தில் ‘வீர ராஜ வீரா’ பாடலை கன்னடத்தில் பாடியுள்ளார்.