பெரியபாளையம்: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமம், யாதவர் தெருவில் கடந்த 50 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வந்தது. இங்கு கன்னிகைப்பேர், ஜெயபுரம், மதுரவாசல், அழிஞ்சிவாக்கம், நெய்வேலி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் 6 முதல் 10ம் வகுப்புவரை படித்து வந்தனர்.
இப்பள்ளி சீமை ஓடு வேயப்பட்ட பழைய கட்டிடம், கடந்த 18 வருடங்களுக்கு முன் கட்டிட விரிசல்கள் மற்றும் மேற்கூரைகள் பெயர்ந்து விழும் நிலையில் பலத்த சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து, இப்பழைய பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அங்கு கூடுதல் வகுப்பறைகளுடன் புதிய பள்ளி கட்டிடத்தை கட்டித் தரவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ஏற்று, கடந்த 15 வருடங்களுக்கு முன் கன்னிகைப்பேர் கிராம எல்லையில் இப்பள்ளி தரம் உயர்த்தப்பட்ட நிலையில் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவர்கள் படிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு, அங்கு இப்பள்ளி மாணவ-மாணவிகள் மாற்றப்பட்டு பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் இங்கு பழைய பள்ளிக் கட்டிடம் முற்றிலும் இடிந்து விழும் நிலையில், தற்போது மாட்டுத் தொழுவமாக மாறிவிட்டது. அங்கு அனைத்து நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டி அரசு பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
The post பெரியபாளையம் அருகே மாட்டுத் தொழுவமாக மாறிய பள்ளி கட்டிடம்: புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தல் appeared first on Dinakaran.