ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் போட்டியிடாததால் திமுக எளிதாக வெல்ல வாய்ப்புள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடக்கிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் அக்கட்சியின் வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்புமனுத் தாக்கலுக்கு 2 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் வரும் 17ம் தேதி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளார்.
கடந்த இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 77 பேர் போட்டியிட்ட நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர்கள்கூட ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது. கடந்த 10ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளில் 3 சுயேச்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளான அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. பாஜ இந்த தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கட்சியும் போட்டியில்லை என நேற்று அறிவித்தது.
இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் முக்கிய கட்சிகள் பின்வாங்கியுள்ளன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்கள் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என தெரிவித்துள்ளார். ஆனால் 2 நாளில் வேட்பாளரை அறிவிக்கப்போவதாக அவர் தெரிவித்திருந்தும் இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பொங்கலன்று வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக நேற்று அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை அவர் வேட்பாளரை அறிவித்தால் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் இடையிலான இருமுனை போட்டியே நிலவும்.
இதற்கிடையே தந்தை பெரியார் குறித்து சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவருக்கு எதிராக பெரியாரிய அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர் பெரியாரை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். இது அவர் மீது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி பெரியார் பிறந்த மண். அந்த தொகுதியில் வேட்பாளரை அறிவித்து எப்படி சீமான் ஓட்டு கேட்டு வந்து நிற்க போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அவர் மீது ஈரோடு மாவட்டத்தில் பெரியாரிய அமைப்பினர் அளித்துள்ள புகார்கள் குவிந்து வருகின்றன. அப்படிப்பட்ட நிலையில் இந்த தொகுதியில் அவருக்கு எந்த வகையில் ஆதரவு கிடைக்கும்? இதனால் திமுக இத்தொகுதியில் எளிதில் வெல்ல வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
The post பெரியார் அவதூறால் சீமானுக்கு பெரும் பிரச்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக எளிதாக வெல்ல வாய்ப்பு appeared first on Dinakaran.