பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் நேரமில்லா நேரத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் எழுந்து ஏதோ ஒரு விஷயம் குறித்து பேச முற்பட்டார். அப்போது சபாநாயகர் அப்பாவு முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பேச உள்ளார். அவர் பேசி முடித்த பின்னர் உங்களுக்கு பேச அனுமதி அளிக்கிறேன் என்றார். ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் எங்களை பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டே இருந்தார். தொடர்ந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று அதிமுகவினரை உட்காருமாறு கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொண்டிருந்தார். ஆனால் சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கவில்லை. இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில் “பொன்முடி, செந்தில் பாலாஜி, கே.என்.நேரு ஆகிய 3 அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. எங்களை தொடர்ந்து புறக்கணிப்பதிலேயே சபாநாயகர் நேரம் செலவழிக்கிறார். பிரதான எதிர்க்கட்சி விவாதிப்பதற்கு சபாநாயகர் நேரம் கொடுப்பதில்லை” என்றார்.
The post பேச அனுமதிக்க கோரி கோஷம்: அதிமுக வெளிநடப்பு appeared first on Dinakaran.